Latest

கர்மவீரர் காமராசர் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

கல்வி கண் திறந்த தெய்வம் , கருப்பு காந்தி, கர்ம வீரர், கிங் மேக்கர்  என பல சிறப்பு  பெயர்களால் அழைக்கப்படுபவர்  காமராஜர். இன்று வரையிலும், இவரை போன்ற வேறொரு தலை சிறந்த அரசியல் தலைவர் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும், கிடைக்கவில்லை என்பது தான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். மக்களின் நலனுக்காக உழைத்த நல்ல உள்ளம் கொண்ட இவர் நம் நாடு மேலுயர வேண்டும் என்றால், முதலில் கல்வி நிலையில் மேன்மை நிலையை அடைய வேண்டும் என்று அன்றே உணர்ந்து தமிழகமெங்கும் நிறைய பள்ளிக் கூடங்களை திறந்து வைத்தார். தன வாழ்நாளில் இறுதி வரை மக்களின் பணத்தில் ஒரு பைசாவை கூட வீணாக செலவளிக்காமல் உத்தமராக வாழ்ந்து, மறைந்து புனித ஆத்மா காமாராஜர். 

அவருடைய பிறந்தநாளாம் சூலை 15 ஆம் நாளை நாம் அனைவரும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம் . இந்நன்நாளில் கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பற்றி காண்போம்.




1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 

2. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.


3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

4. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

5. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.


6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.


8. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.


10. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

11. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.


12. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.

13. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.


14. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

15. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.


16. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

17. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.


18. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.

19. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.


20. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

21. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.


22. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு

23. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது

24. காமராஜர் அவர்கள் திருநெல்வேலி மக்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

25. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்

26. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்

27. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்

28. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.

29. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

30. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

31. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

32. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.

33. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.

34. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

35. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

36. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.

37. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

38. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

39. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

காமராஜரைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சென்னையிலுள்ள அவரது நினைவில்லத்துக்குச் செல்லலாம். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த வீடும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபமும் பார்க்க வேண்டிய இடங்கள். இங்கெல்லாம் காமராஜர் பயன்படுத்திய பொருட்களும், ஏராளமான புகைப்படங்களும் அவரது உன்னத வாழ்வின் சாட்சியங்களாக இருக்கின்றன. ஆ.கோபண்ணா எழுதிய ‘காமராஜ் ஒரு சகாப்தம்’ புத்தகம் காமராஜர் வாழ்க்கை தொடர்பான அரிய ஆவணம்.


No comments