Latest

ஜெயம் மற்றும் வளம் தரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை

நவராத்திரி பண்டிகையில் முக்கிய அம்சமான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம். இது வரை செய்த தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.



இன்றைய தினம் அனைவரது வீடுகளிலும் உள்ள முக்கிய பொருட்களையும், பொறி, கடலை, பழம் உள்ளிட்டவைகளை இறைவன் படத்திற்கு முன்பு வைத்து வழிபட்டனர். தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பணிபுரிவோர் அனைத்து பொருட்களையும் நன்கு துடைத்து அலங்காரம் செய்து செய்யும் தொழில் மேன்மேலும் சிறக்க வேண்டி வழிபட்டனர்.

ஆயுத பூஜை


உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான். எனவே வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை அனைத்து வகையான உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

வெற்றிதரும் விஜயதசமி

இன்றையதினம் புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று என்று ஐதீகம் சொல்லுகின்றது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் தட்டில் நெல்பரப்பி குழந்தைகளின் கைபிடித்து அ என்று எழுதத் தொடங்கினால் சரஸ்வதியின் பரிபூரண அருள் கிடைக்கும்.


இதிகாசங்களில் விஜயதசமி


சீதையை தேடிச் சென்ற ராமர், சண்டி ஹோமம் செய்து அன்னை துர்காவின் அருளை பெற்று, ராவணாசுரனை இந்த விஜயதசமி நாளில் வதம் செய்தார். காமம், கோபம், தவறான வழி, பேராசை, கர்வம், பொறாமை, மன கட்டுபாட்டின்மை, ஞானமின்மை, மனஉறுதி இன்மை, அகங்காரம் இந்த பத்து தீய குணங்களே ராவணனின் அம்சமாக கருதப்படுகிறது. அருளின் வடிவமான ராமபிரான் விஜயதசமி நாளில் இந்த பத்து தீமைகளையும் அளித்தார் என்கின்றன புராணங்கள். 

எனவே நாமும் அன்னையை பிரார்த்தனை செய்து மனமுருக வணங்கினால் தீமைகள் விலகி அனைத்து வளங்களும் கிடைக்கும்.

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள். _/\_ 

No comments